Monday 20 January 2014

ப்ரியமானவர்களுக்கு

தினமும் எதையாவது எழுதசொல்லும் ப்ரியமானவர்களுக்கு.............


”தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்” சிறுகதை தொகுப்பு மற்றும் விகடனில் தொடராக வந்த ”மறக்கவே நினைக்கிறேன்” இவை தான் என் அறிமுகம். இப்போதைக்கு என் முழு முகமும் கூட....என் எழுத்துக்களை எதேச்சையாகவோ அல்லது வேறு வழியில்லாமலோ வாசித்த சிலர் என் மீதும் என் எழுத்தின் மீதும் ஒரு நம்பிக்கை வைத்து என்னை என்னுடன் சேர்ந்தே இப்போது பின் தொடர்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.....ஆனால் நான் அவர்களுடன் எதையும் பேசாமல் மவுனமாகவே நடந்து வருகிறேன் என்றும் எனக்கு தெரியும்........காரணம் வேறொன்றுமில்லை என் குரல் என் முகம் எதுவும் எனக்கு இன்னும் முழுமையடைவில்லை. வாசிப்பின் அதீத ருசி இப்போதுதான் என் உள் நாக்குகளில் சொட்டி பரவ தொடங்கியிருக்கிறது. எழுதுவதை விட எனக்கு வாசிப்பின் ருசி தான் பிடித்தமானதாக இருக்கிறது. ஒரே ஒரு ஆண் ஓராயிரம் பெண்கள் உள்ள உலகத்தில் விடபட்டவனை போல வாசிப்பிற்குள் என் ஆன்மா அவ்வளவு அவசரத்துடனும் அவ்வளவு ஆவேசத்துடனும் அலைகிறது. .....அது பச்சிளம் குழந்தையாய் பாலுக்கு அலைகிறதா......நடந்திடும் குழந்தையாய் பிடி விரலுக்கு அலைகிறதா................பருவக்குழந்தையாய் பரவசத்தில் அலைகிறதா......எல்லாவற்றையும் தேடும் குழந்தையாய் அனுபவத்திற்கு அலைகிறதா.......என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அது அலைகிறது. எழுத்துக்கள் விரிக்கும் விரி கோண உலகத்தில் எந்த விதியும் இல்லாமல் அலைவது எனக்கு பிடித்திருக்கிறது...........

ஆனால்....இப்படியே வெறுமென வாசித்துக்கொண்டிருந்தால் என் சிரசி ஒருநாள் வெடித்துவிடக்கூடும் என்பதும் எனக்கு தெரியும். வெடிக்கட்டுமே ......துரோகங்களின் போது, புறக்கனிப்பின் போது, பெரும் பசியின் போது, ஆயிரம் காதல் தோல்விகளின் போது வெடிக்காத என் சிரசி இப்போதாவது வெடித்து சுக்கு நூறாகட்டுமே, அதில் சிதறும் சில்லுகளின் வலியாக என் கபாலத்திலிருக்கும் அந்த கருணையற்ற காலம் ஒழுகி ஒழிந்து போகட்டுமே.........அச்சபடாதீர்கள் ஆனால் அப்படி எதுவும் நடக்காது....என் கபாலம் ஒரு நாளும் அதுவாக வெடித்து என்னை விடுதலை செய்யாது. தானாக வெடித்துவிடும் தன்னிரக்கம் எதுவும் அதற்கு எப்போதும் இருந்ததுமில்லை......ஆகவே நான் தான் என்னை காப்பாற்றிக்கொள்ள தன்னிச்சையாக அதை வெடிக்க செய்ய வேண்டும்.....

ஆனால்.........எப்போதும் ஒரு சறுக்கு ராட்டினம் ஒன்றை சுழல் ராட்டினத்தை போல சுற்றிக்கொண்டிருக்கும் என் கபாலத்தை எப்படிதான் நான் வெடிக்க செய்வது...

வேறு எப்படி , வலிக்க வலிக்க எல்லாவற்றையும் எழுதி தீர்த்து தான் அதை வெடிக்க வைக்க முடியும்.......................ஆகவே எப்போது என் கபாலம் என்னை தொந்தரவு செய்கிறதோ, எப்போது அது என்னை கொடுமைபடுத்துகிறதோ, அப்போதெல்லாம் அதை எழுதி எழுதி என் மீது துளி கருணையற்ற என் கபாலத்தை எதுவுமற்ற காலி டப்பாவாக்கி அப்புறம் வெடிக்க செய்யலாம் என்றொரு கருணை கொலை திட்டமிருக்கிறது என்னிடம்.................

அது வலைதளமா....அல்லது முகநூலா......புத்தகங்களா........அல்லது என் சினிமாவா..................எதுவென தெரியாது. ஆனால் வலிக்கும் போது மட்டும் தான் என்னால் எழுத முடியும்......அதுவரை உங்களுடன் சேர்ந்து உங்கள் கதைகளை பேசி பழகி சிரித்துக்கொள்ள ப்ரியம் வைத்துக்கொள்ள மட்டும் என்னை அனுமதியுங்கள் என் நண்பர்களே..............வேறொன்றுமில்லை....................................


மாரிசெல்வராஜ்.
13.1.2014.

(புத்தக திருவிழாவிற்கு “தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்” தொகுப்பு வம்சி ஸ்டாலுக்கு நேற்று தான் வந்திருக்கிறது....இன்று வாங்கலாம்....................அப்புறம் “மறக்கவே நினைக்கிறேன்” தொகுப்பு பொங்கலுக்கு மறுநாள் புதன்கிழமை தான் விகடன் ஸ்டாலுக்கு வருமாம்)

No comments:

Post a Comment